|
இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
நே - (பெ) ஈரம், கருணை, mercy, gracev
நேமி உய்த்த நேஎ நெஞ்சின் - புறம் 3/4
சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்
மேல்
நேடு - (வி) தேடு, seek, look out for
வையை மடுத்தால் கடல் என தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று - பரி 20/42,43
வையை கடலில் சென்று புகுந்தாற்போல
அலையலையாய்க் கிடந்த அந்த மணற்பரப்பில் தேடியவராகச் செல்ல
மேல்
நேமி - (பெ) 1. தேர் உருளை, wheel of a chariot
2. திருமால் கையிலுள்ள சக்கராயுதம், the discuss in the hands of Lord Vishnu
3. ஆணைச் சக்கரம், Wheel of sovereignty
4. கடல், sea
1.
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர்
வன் பரல் முரம்பின் நேமி அதிர
சென்றிசின் வாழியோ பனி கடு நாளே - நற் 394/4-6
கட்டப்பட்ட மணிகள் பெரிதாய் ஒலிக்கும் அணிகளால் புனையப்பட்ட நெடிய தேரில்,
வன்மையான பரல்கற்களைக் கொண்ட சரளைக்கல் பூமியில் சக்கரங்கள் அதிரும்படியாகச்
சென்றான், வாழ்க! அந்த பனிமிக்க நாளில்;
2.
நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல - முல் 1-3
சக்கரத்துடன்
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்
(மாவலி வார்த்த)நீர் (தன் கையில்)சென்றதாக உயர்ந்த திருமாலைப் போல,
3.
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல - புறம் 17/5-8
தீயன போகவும் கோல் செங்கோலாகவும்
உரிய இறைப்பொருளுண்டு நடுவுநிலையுடன்
தம்சுடர்விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும்
வல்லவராய் வாழ்ந்தோர்தம் மரபினைக் காத்தவனே!
4.
நேமி தந்த நெடு_நீர் நெய்தல் - அகம் 400/21
ஆழமான நீரையுடைய கடல் தந்த நெய்தலின்
- நெடுநீர் நேமி என மாறிக்கூட்டுக - நாட்டார் உரை விளக்கம்
மேல்
நேமிஅம்செல்வன் - (பெ) திருமால், Lord Vishnu
நேர் கதிர் நிரைத்த நேமிஅம்செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் - அகம் 175/14,15
நிரம்பிய கதிர்களின் ஒழுங்கினைக் கொண்ட ஆழியையுடைய திருமாலின்
பகைவர் போரொழிவதற்குக் காரணமான மார்பினிடத்தே தங்கிய மாலை போல
மேல்
நேமியான் - (பெ) திருமால், Lord Vishnu
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல - கலி 105/9
வளம்செறிந்த உருண்டையான சக்கரப்படையையுடைய திருமால் வாய் வைத்து ஊதிய வெண்சங்கு போன்ற
மேல்
நேர் - 1. (வி) 1. வளைவு இல்லாமலிரு, செவ்வையாக இரு, be straight and perfect
2. ஒத்திரு, resemble, match
3. இளகு, மென்மையாகு, become soft
4. உடன்படு, agree, consent
5. உறுதிகொள், நிச்சயி, resolve, determine
6. எதிர், சந்தி, come in opposition, encounter
7. பொருந்தியிரு, இசைவாக இரு, be fit
- 2. (பெ) 1. வளைவு இல்லாதது, செவ்வையானது, being straight, perfect
2. செம்மை, செப்பம், refinement, nicety
3. ஒப்புமை, நிகர், similarity, equality
4. செங்குத்து, verticality
1.1
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை - மது 316
அரம் கீறியறுத்த இடம் செவ்வையாகிய விளங்கும் வளைகளும்,
1.2
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும் - நற் 10/2,3
பொன்னை ஒத்திருக்கும் மேனியில் நீலமணி போலும் தாழ்ந்த
நல்ல நெடிய கூந்தல் நரையோடு முடியப்பெற்றாலும்
1.3
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே - ஐங் 151/5
உடைந்துபோன என் நெஞ்சத்துடன் அவனுக்காக மனமிளகமாட்டேன்
1.4
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது - நற் 130/7,8
அவருக்கு உடன்பட்ட என் நெஞ்சினையும், அவர் பிரிவால் நெகிழ்ந்துபோன தோள்களையும்
வாடிப்போன மேனியின் வரிகளையும் பார்த்தாவது தனது பிரிவை நீட்டிக்காது
1.5
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் - நற் 393/10,11
நம்மவர்கள் பெண்கொடுக்க நிச்சயித்தால், அவருடன்
இசைவாகப் பேசுவார்களோ? வாழ்க, தோழியே!, நம் காதலர்
1.6
குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு - பெரும் 384
இளைய திங்களைச் செம்பாம்பு எதிர்கொண்டாற் போன்று
1.7
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே - குறு 49/3-5
இப் பிறவி போய் இனி எத்தனை பிறவியெடுத்தாலும்
நீயே என் கணவனாக இருக்கவேண்டும்,
நானே உன் நெஞ்சுக்கு இசைவானவளாய் இருக்கவேண்டும்.
2.1
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப - நெடு 62,63
நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்படாமல், சிக்கென்ற நிலையினையுடைய
பொருதுகின்ற வாயுடைய(இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க;
2.2
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
கோழி எறிந்த கொடும் கால் கனம் குழை - பட் 22,23
நேர்த்தியான நகைகளை அணிந்த பெண்கள், உலருகின்ற நெல்லைத் தின்னும்
கோழியை (விரட்ட)எறிந்த வளைவான அடிப்பகுதியையுடைய பொன்னாற்செய்த காதணி,
2.3
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் - மலை 13
சமமாய் எடைகட்டி(பைகளில் இட்டு வாயின் சுருக்கை)இறுக்கித் தோளின்(இருபுறமும்) தொங்கவிட்ட
பைகளை உடையவராய்
2.4
நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் - மலை 238,239
செங்குத்தைக் கொண்ட(=செங்குத்தான) உயர்ந்த மலையில், தேர்ச்சக்கரம் போன்று (தேனீக்கள்)கட்டிய,
தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்,
மேல்
நேர்கோல் - (பெ) துலாக்கோல், weighing rod
ஓர்வு_உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன் - கலி 42/14,15
நன்கு ஆராய்ந்து, ஒரு பக்கம் சாயாத துலாக்கோல் போல,
அறத்தைச் செய்கின்ற உள்ளம்படைத்தவன்!
மேல்
நேர்தல் - (பெ) 1. எதிர்ப்படுதல், meeting, encountering
2. முற்றுவித்தல், making complete
1.
பைதலம் அல்லேம் பாண பணை தோள்
ஐது அமைந்து அகன்ற அல்குல்
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே - ஐங் 135
வருத்தப்படமாட்டேன் பாணனே! மூங்கில் போன்ற தோள்களையும்,
மென்மையாக அமைந்து அகன்றிருக்கும் அல்குலையும் கொண்ட
நெய்தல் போன்ற அழகிய கண்களையுடையவளை நேரிலே காண நேர்ந்தாலும் -
2.
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி - அகம் 125/2
முற்றுப்பெறாத இல்வாழ்க்கையை முற்றுவிக்க வேண்டி
மேல்
நேர்நிர - (வி) சமமாய் நில், stand equal
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர்நிரந்து
ஏறுமாறு ஏற்கும் இ குன்று - பரி 18/5,6
புகழைப் பரந்து பெற்று விளங்கும் இமயமலையுடன் நேர்நின்று
மாறுபடுதலை ஏற்கும் இந்தத் திருப்பரங்குன்றம்;
மேல்
நேர்நிறுத்து - (வி) முன்னிலையாக்கு, keep in the forefront
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணி - மது 612-614
அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி,
கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண்
புகழ் மிக்க முருகனை வழிபடுதலால்
மேல்
நேர்படு - (வி) எதிரெதிராகு, be face in face
இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி
குருதியொடு பறித்த செம் கோல் வாளி - குறு 272/3-6
தன் இனத்தைவிட்டுப் பிரிந்த
துன்பத்தைக் கொண்ட இளையமான் நேரே இருக்க, தன் தமையன்மார்
முழக்கமிடும், மிகுந்த வேகத்தையுடைய ஆண்மானின் மேல் அழுந்துமாறு எய்த,
குருதியோடு பிடுங்கிய சிவந்த கோலையுடைய அம்பானது
மேல்
நேரார் - (பெ) பகைவர், foes
நேரார்
நாடு படு நன் கலம் தரீஇயர்
நீடினர் தோழி நம் காதலோரே - ஐங் 463/3-5
பகைவரின்
நாட்டில் கிடைக்கும் நல்ல அணிகலன்களைக் கொண்டுவருவதற்காகவே
தம் வரவை நீட்டித்துள்ளார், தோழி, நம் காதலர்
மேல்
நேரி - (பெ) சேரநாட்டிலுள்ள ஒரு மலை, a hill in the cEra country
கல் உயர் நேரி பொருநன்
செல்வக்கோமான் பாடினை செலினே - பதி 67/22,23
பாறைகளால் உயர்ந்த நேரி என்னும் மலைக்கு உரியவனான,
செல்வக் கோனுமாகிய வாழியாதனைப் பாடினவனாகச் சென்றால்
மேல்
|
|
|